- Home
- Tamil Nadu News
- சென்னை
- ஸ்டாலினும், அவரது மகனும் யார் வீட்டு கதவை தட்டுனாங்கனு சொல்லட்டா! இறங்கி அடிக்கும் எடப்பாடி!
ஸ்டாலினும், அவரது மகனும் யார் வீட்டு கதவை தட்டுனாங்கனு சொல்லட்டா! இறங்கி அடிக்கும் எடப்பாடி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Edappadi Palaniswami Harshly Criticized Stalin and Udhayanidhi
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு
அனைத்து இடங்களுக்கும் செல்லும் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டயலிட்டு வருகிறார். மேலும் திமுக அரசில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோர் இந்த ஆட்சியில் படும் சோதனைகள் குறித்தும் இபிஎஸ் சுட்டிக்காட்டி வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாக மக்கள் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்டாலின், உதயநிதி கடும் விமர்சனம்
இது ஒருபக்கம் இருக்க பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், ''எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வீட்டு கதவை தட்டி கூட்டணியில் சேர்ந்துள்ளார். பாஜகவின் அடிமையாக அவர் இருக்கிறார்'' என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை இன்று தொடங்கி வைத்தார்.
அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' சுற்றுப்பயணத்தில் இதுவரை 46 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அப்போது மக்கள் எனக்கு அளித்த ஆரவாரம், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெறும்'' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
ஸ்டாலினும், அவரது மகனும் யார் வீட்டு கதவை தட்டினார்கள்?
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''நாங்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து ஸ்டாலினும், அவரது மகனும் பேசியுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் தவறா? உள்துறை அமைச்சரை சந்தித்ததில் என்ன தவறு உள்ளது? இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அவர்? ஸ்டாலினும், அவரது மகனும் யார் வீட்டு கதவை தட்டினர்? என்று காட்டமாக தெரிவித்தார்.
நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் அரசு
மேலும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய இபிஎஸ், ''திமுக அரசுக்கு மக்களின் பிரச்சனை எதுவுமே தெரியவில்லை. இந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு கூட மதிப்பு இல்லை. நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. நேர்மையான அதிகாரிகளை பழிவாங்குவது நல்லதல்ல. திமுக வாக்குறுதி அளித்து செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் தெரியப்படுத்தப்படும்'' என்று கூறினார்.
பிரதமர் மோடியை சந்திக்க திட்டமா?
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டப்போது, ''பிரதமரின் தமிழக பயணத்திட்டம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவரை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை'' என்று தெரிவித்தார்.