இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் கால் பதித்த முகேஷ் அம்பானி; ரூ.645 கோடிக்கு புதிய அணி!
முகேஷ் அம்பானி இங்கிலாந்து ஹண்ட்ரட் லீக் தொடரின் ஒரு அணியை ரூ.645 கோடிக்கு வாங்கியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் கால் பதித்த முகேஷ் அம்பானி; ரூ.645 கோடிக்கு புதிய அணி!
இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்படுவது போன்று இங்கிலாந்தில் ஹண்ட்ரட் லீக் (The Hundred league) என்ற கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ், இலண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ், நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ், ஓவல் இன்வின்சிபில்ஸ், சதர்ன் பிரேவ், டிரெண்ட் ராக்கெட்ஸ், வெல்ஷ் ஃபயர் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன.
ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட் தொடர்
ஓவர்கள் மூலம் கணக்கிடப்படாமல் 100 பந்துகளை மட்டுமே கொண்டு ஹண்ட்ரட் லீக் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தாலும் ஐபிஎல்லை போன்று பிரபலமடையவில்லை. இதனால் ஹண்ட்ரட் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளின் 49% பங்குகளை விற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இந்த பங்குகளை வாங்க இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
ND vs ENG 5th T20: ஒன்றா, இரண்டா 5 சாதனைகளை படைத்த அபிஷேக் சர்மா; செம மாஸ்!
முகேஷ் அம்பானி
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானி குழுமம் இப்போது ஹண்ட்ரட் லீக் தொடரிலும் கால் பதித்துள்ளது. அதாவது ஓவல் இன்வின்சிபில்ஸ் அணியின் 49% பங்குகளை சுமார் ரூ.645 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். இதன்மூலம் உலகளாவிய கிரிக்கெட்டில் முகேஷ் அம்பானி குழுமம் கால்பதித்துள்ளது.
இதேபோல் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, டைம்ஸ் இன்டர்நெட், அடோப் மற்றும் சில்வர் லேக் டெக்னாலஜி அகியோர் இணைந்து லண்டன் ஸ்பிரிட் அணியில் 49 சதவீத பங்குகளை வாங்கியுள்ளனர். லண்டன் ஸ்பிரிட்டில் அதிகபட்ச ஏலம் 295 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அதாவது தோராயமாக ரூ.3,170 கோடிகள். இப்போது சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இதன் 49% பங்குகளை ரூ.1,553 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
சுந்தர் பிச்சை
இதேபோல் சன் டிவி நெட்வொர்க் மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் முறையே நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் சதர்ன் பிரேவை குறிவைப்பதாக கூறப்படுகிறது. ஹன்ட்ரட் லீக் தொடர் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் அந்த அணிகளிடம் தான் இருக்கும். புதிய உரிமையாளர்களும், அந்த அணியும் இணைந்தே போட்டியை நடத்தும் என்று இங்கிலாந்து அண்ட் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உலகளவில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் தான் இப்போது வரை டாப்பில் உள்ளது. இப்போது ஹண்ட்ரட் லீக் தொடரின் அணிகளை பல்லாயிரம் கோடிக்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் வாங்க உள்ளதால் இந்த தொடர் உலகளவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி! 150 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!