SA20: தென்னாப்பிரிக்காவிலும் MI ஆதிக்கம்; கோப்பையை தட்டித்தூக்கிய MI கேப் டவுன்!
தென்னாப்பிரிக்காவில் நடந்த SA20 கிரிக்கெட் தொடரில் MI கேப் டவுன் அணி, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

SA20: தென்னாப்பிரிக்காவிலும் MI ஆதிக்கம்; கோப்பையை தட்டித்தூக்கிய MI கேப் டவுன்!
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் SA20 எனப்படும் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 20205ம் ஆண்டுக்கான SA20 கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், நேற்று MI கேப் டவுன் அணியும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த MI கேப் டவுன் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது.
சிக்சர் மழை பொழிந்த ரியான் ரிக்கல்டன் 4 சிக்சர்களுடன் 15 பந்துகளில் 33 ரன்கள் விளாசி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். டெவால்ட் பிரெவிஸ் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 18 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். கானர் எஸ்டெர்ஹுய்சென் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் மார்க்கோ யான்சென், ரிச்சர்ட் க்ளீசன், லியாம் டாசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
MI கேப் டவுன்
பின்பு பெரிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்ஸ்மேன்கள் கசிகோ ரபடா, டிரன்ட் போல்ட் வேகப்பந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியின் டாம் அபெல் 30 ரன்கள் எடுத்தார். டோனி டி சோர்சி 26 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எய்டன் மார்க்ரம் (6 ரன்), அதிரடி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (15 ரன்) ஏமாற்றினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான நிலை: தலையில் பலத்த அடி; ரத்த வெள்ளத்தில் சரிந்த சிஎஸ்கே வீரர்!
கசிகோ ரபடா
இதன்மூலம் MI கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று SA20 2025 கோப்பையை தட்டித்தூக்கியது. தென்னாபிரிக்க டி20 தொடரில் MI கேப் டவுன் அணி கோப்பையை வெல்வது இதுவே முதன்முறையாகும். MI கேப் டவுன் அணி தரப்பில் கசிகோ ரபடா 3.4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். டிரன்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பைனலில் முக்கிய விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் 19 விக்கெட் வீழ்த்தியும், 209 ரன்களும் அடித்த மார்கோ யான்சென் தொடர் நாயகன் விருது வென்றார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி
கோப்பையை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த MI கேப் டவுன் அணி கேப்டன் ரஷித் கான், ''இந்த போட்டி முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அழுத்தத்தின் கீழ் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் எந்த சுயநல இன்னிங்ஸையும் விளையாடவில்லை. அனைவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பங்களிப்பு செய்தனர். கடந்த சீசனில் முதுகு காயத்தால் தவறவிட்டேன். இந்த முறை அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இந்த எம்ஐ குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்றார்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத 3 ஸ்டார் பிளேயர்ஸ்!