தமிழ் லயன்ஸ் அணிக்கு 2ஆவது தோல்வி; ஆண்களுக்கான போட்டிகளின் முடிவுகள்!
GIPKL 2025 Mens Next 3 Match Results : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 3 போட்டிகளில் முறையே தெலுங்கு பாந்தர்ஸ், மராத்தி வால்ச்சர்ஸ், போஜ்புரி லீபர்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

GIPKL 2025 Mens Next 3 Match Results : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணி, பெண்கள் அணி என்று மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. முதல் நாளில் நடைபெற்ற 3 போட்டிகளில் முறையே பஞ்சாபி டைகர்ஸ், ஹரியான்வி ஷார்க்ஸ், மராத்தி வால்ச்சர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
தெலுங்கு பாந்தர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ்
இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தெலுங்கு சீட்டாஸ், பஞ்சாபி டைகர்ஸ், தமிழ் பெண் சிங்கம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தான் நேற்று ஆண்களுக்கான 3 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் தெலுங்கு பாந்தர்ஸ் மற்றும் தமிழ் லயன்ஸ் அணிகள் மோதின.
தெலுங்கு பாந்தர்ஸ்
இந்தப் போட்டியில் தெலுங்கு பாந்தர்ஸ் அணி வீரர் சாவின் நார்வால் சிறப்பாக ரைடு சென்று அணிக்கு 10 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். அதே போன்று சுபாஷ் நார்வாலும் தன் பங்கிற்கு சிறப்பாக டிஃபெண்ட்ஸ் செய்து அணிக்காக 9 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார். இதே போல மற்ற வீரர்கள் புள்ளிகள் எடுத்துக் கொடுக்கவே தெலுங்கு பாந்தர்ஸ் 33 புள்ளிகள் பெற்றது. ஆனால், கடைசி வரை போராடிய தமிழ் லயன்ஸ் அணியானது 27 புள்ளிகள் மட்டுமே பெற்றது.
சாவின் நார்வால் ஆட்டநாயகன் விருது
தமிழ் லயன்ஸ் அணியில் சச்சின் ஜோகிந்தர் மட்டுமே சிறப்பாக ரைடு சென்று அதிகபட்சமாக 10 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். அஜய் குமார் 5 புள்ளிகள் பெற்றார். எனினும், தமிழ் லயன்ஸ் 27 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சாவின் நார்வால் 10 புள்ளிகள் எடுத்துக் கொடுத்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
மராத்தி வால்ச்சர்ஸ் மற்றும் பஞ்சாபி டைகர்ஸ்
இதே போன்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற மராத்தி வால்ச்சர்ஸ் மற்றும் பஞ்சாபி டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மராத்தி வால்ச்சர்ஸ் 55 – 44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாபி டைகர்ஸ் அணியில் மிலன் தஹியா சிறப்பாக ரைடு சென்று 12 புள்ளிகள் எடுத்துக் கொடுக்க, அன்கித் தஹியா 16 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். எனினும் பஞ்சாபி டைகர்ஸ் 44 புள்ளிகள் மட்டுமே பெற்றது.
அஷூ நார்வால் 15 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார்
ஆனால், மராத்தி வால்ச்சர்ஸ் அணியில் சிறந்த ரைடரான அஷூ நார்வால் 15 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். இதே போன்று ஆல்ரவுண்டரான சுனில் நார்வால் 12 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். மேலும், டிஃபண்டரான சாஹில் பல்யாண் 9 புள்ளிகள் பெற்றுக் கொடுக்க மற்ற வீரர்கள் ஓரிரு புள்ளிகள் பெற மொத்தமாக 55 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றுக் கொடுத்த அஷூ நார்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போஜ்பூரி லிபார்ட்ஸ் மற்றும் ஹரியான்வி ஷார்க்ஸ்
இறுதியாக நடைபெற்ற போஜ்பூரி லிபார்ட்ஸ் மற்றும் ஹரியான்வி ஷார்க்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் போஜ்புரி லிபார்ட்ஸ் 39 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. போஜ்புரி அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான ரோகித் மோர் 8 புள்ளிகள் பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.