சாம்பியன்ஸ் டிராபியில் மறக்க முடியாத 5 போட்டிகள்! அனல் பறந்த இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்!
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் மறக்க முடியாத 5 போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபியில் மறக்க முடியாத 5 போட்டிகள்! அனல் பறந்த இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2002)
2002ம் ஆண்டு நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தனது மாயாஜால ஆஃப்-ஸ்பின்னால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார், கொழும்பில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான வெற்றியுடன் இந்தியாவை 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த போட்டியில் அரை சதம் அடித்த சேவாக் இந்தியா 261/9 என்ற பெரிய இலக்கை எட்ட உதவினார். சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா ஒன்பது ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 200/3 என நல்ல நிலையில் இருந்தது. அப்போது சேவாக்கின் ஆப் ஸ்பின் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அவர் முக்கிய வீரர்களான மார்க் பவுச்சர், ஜாக் காலிஸ் மற்றும் லான்ஸ் கிளூஸ்னர் ஆகியோரை அவுட் செய்து இந்தியாவை வெற்ரி பெற வைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து (2004)
2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தி ஓவலில் வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 217 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சிவ்னாரைன் சந்தர்பால் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தது 8 விக்கெட் சரிந்து பரிதவித்தது. இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த நிலையில் வெற்றிக்கு 81 ரன்கள் தேவையாக இருந்தது.
ஆனாலும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு கோர்ட்னி பிரவுன் மற்றும் இயன் பிராட்ஷா அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்து 71 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை துரத்திப்பிடித்து முதல் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.
தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (2009)
2009ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி காலியுறுதியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 323 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்தது. ஓவைஸ் ஷா 89 பந்தில் 98 ரன்கள் எடுத்தார். இயான் மோர்கன் 34 பந்தில் 67 ரன்கள் விளாசினார். பின்பு விளையாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 301/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை தோல்வியின் பாதையில் விட்டனர். தென்னாப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் அதிரடி சதம் (134 பந்தில் 141 ரன்) விளாசியும் பலனில்லை.
நியூசிலாந்து vs இலங்கை
நியூசிலாந்து vs இலங்கை (2013)
2013ல் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 38 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. பின்பு விளையாடிய நியூசிலாந்தும் 80/6 என தோவ்லியின் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் நாதன் மெக்கல்லம் (32), டிம் செளதி (13) சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். 36.4 ஓவரில் 9 விக்கெட் இழந்து நியூசிலாந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா vs பாகிஸ்தான் பைனல் (2017)
2017ம் ஆண்டு தி ஓவலில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் இறுதிபோட்டியை இரு நாட்டு ரசிகர்களாலும் இன்றளவும் மறக்க முடியாது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய பகர் ஜமான் அதிரடி சதம் (106 பந்தில் 114 ரன்கள்) விளாசினார்.
பின்பு விளையாடிய இந்திய அணி 30 ஓவர்களில் வெறும் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதுதான் கடைசியாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகும். இந்திய பேட்ஸ்மேன்களை சிதைத்த முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.