- Home
- Sports
- Sports Cricket
- முகமது ஷமியை இந்திய அணியில் எடுக்காததன் பின்னணியில் ரோகித் சர்மா?.. அதிர்ச்சி தகவல்!
முகமது ஷமியை இந்திய அணியில் எடுக்காததன் பின்னணியில் ரோகித் சர்மா?.. அதிர்ச்சி தகவல்!
கடந்த ஆண்டு உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

முகமது ஷமியை அணியில் எடுக்கவில்லை
இந்திய அணி பாஸ்ட் பவுலர் முகமது ஷமியை சமீபகாலமாக இந்திய அணியில் எடுக்கவில்லை. உடற்தகுதி பெறாத காரணத்தால் அவரை அணியில் சேர்க்கவில்லை என தகவல்கள் கூறின. இந்த நிலையில், உடற்தகுதி மட்டுமல்ல, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரோகித், கம்பீர் விரக்தி
அதாவது டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா (Rohit Sharma) மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) ஆகியோர் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். கடந்த ஆண்டு உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி கடைசியாக விளையாடினார்.
அதன் பிறகு அவர் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வங்காள அணிக்காக ரஞ்சி டிராபியில் (Ranji Trophy) தனது உடற்தகுதி மற்றும் ஃபார்மை நிரூபித்த போதிலும், ஷமிக்கு தேசிய அணியின் கதவுகள் திறக்கப்படவில்லை.
ரோகித் சொன்னது என்ன?
ஈடன் கார்டன்ஸில் தொடங்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் ஷமி இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோகித், ஷமியின் முழங்காலில் வீக்கம் இருப்பதாகக் கூறினார்.
ஆனால், அதன் பிறகு காலில் கட்டுடன் வலைப்பயிற்சியில் சில வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு ஷமி பந்துவீசுவது காணப்பட்டது. பின்னர், குருகிராமில் (Gurugram) நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷமி கலந்து கொண்டார்.
விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷமி
அப்போதும் அவர் ஃபிட்டாகவே காணப்பட்டார். ஆனால் இந்திய அணி நிர்வாகத்தின் கால அடிப்படையில் உடற்தகுதியை பெற ஷமி முயற்சிக்கவில்லை. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்பு ஷமி முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பியது.
ஆனால் அவர் மறுவாழ்வு மையத்தில் இருப்பதற்குப் பதிலாக, பல்வேறு தயாரிப்புகளின் விளம்பரப் படப்பிடிப்புகள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுவே அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தி அடையக் காரணம்.
தனக்குத் தானே குழி பறித்த ஷமி
பிசிசிஐ வட்டாரங்களின்படி, இந்திய அணியின் மருத்துவர்கள் உடற்தகுதி பெறச் சொன்ன எதையும் ஷமி செய்யவில்லை. மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது அவர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவில்லை. அப்போதே, ஷமிக்குப் பதிலாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.
ஷமிக்கு எதிராகச் சென்ற மற்றொரு விஷயம், அவர் அணியின் உள் விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார். தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் கருத்தை ஷமி வெளிப்படையாக எதிர்த்தார். இதன் பிறகு, அவரால் தேசிய அணிக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.