இதுதான் என் வேலையா? பிசிசிஐயை விளாசித் தள்ளிய முகமது ஷமி! என்ன விஷயம்?
Mohammed Shami: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாத இந்திய அணி வீரர் முகமது ஷமி, பிசிசிஐயையும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஓடிஐ தொடருக்கான இந்திய அணியின் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் ஆஸ்திரேலிய தொடரில் அனுபவமிக்க முகமது ஷமி சேர்க்கப்படவில்லை.
ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டது ஏன்?
அதே வேளையில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. ஹர்சித் ராணா ஐபிஎல்லில் கம்பீர் பயிற்சியாளராக இருந்த கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியில் இருந்தார். அதன் காரணமாக கம்பீர் ராணாவை இந்திய அணியில் அனைத்து பார்மட்களிலும் சேர்த்து வருவதாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் வைத்து வந்தனர்.
முகமது ஷமி தேர்வாகவில்லைமுகமது ஷமி தேர்வாகவில்லை
உடற்தகுதியை காரணம் காட்டி தேர்வாளர்கள் முகமது ஷமியை அணியில் சேர்க்கவில்லை. இதனால் பொங்கியெழுந்த முகமது ஷமி, பிசிசிஐ மற்றும் அஜித் அகர்கர் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முகமது ஷமி, ''தேர்வு என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சனை இருந்தால், நான் பெங்காலுக்காக ரஞ்சி விளையாட முடியாது. ரஞ்சியில் நான்கு நாள் போட்டியில் நான் விளையாட முடிந்தால், 50 ஓவர் போட்டியிலும் என்னால் விளையாட முடியும்'' என்றார்.
பிசிசிஐ சாடிய முகமது ஷமி
தொடர்ந்து பேசிய ஷமி, ''யாருக்கு உடற்தகுதி அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது என் வேலை அல்ல. என் வேலை என்சிஏ சென்று பயிற்சி செய்வது மட்டுமே. நீங்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால், நான் பெங்காலுக்காக விளையாடுவேன், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை''என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஷமி, காயத்தால் அறுவை சிகிச்சை செய்தார்.
ஷமி உடற்தகுதி எப்படி இருக்கிறது?
முகமது ஷமி கடைசியாக மார்ச் 2025-ல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெங்கால் பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா, ஷமி இப்போது ஃபிட்டாக இருக்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.