IPL 2023: காயத்தால் ஐபிஎல்லில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்..! தோல்விகளால் துவண்டுபோன SRH அணிக்கு மரண அடி
ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சுந்தரின் விலகல் மரண அடி.
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவருகின்றன. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.
டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் படுமோசமாக விளையாடி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.
இந்த சீசனில் புதிய கேப்டனான ஐடன் மார்க்ரமின் கேப்டன்சியில் ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணியில் மார்க்ரம், மயன்க் அகர்வால், கிளாசன், திரிபாதி, ஹாரி ப்ரூக் என அதிரடி வீரர்கள் இருந்தாலும் கூட, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதால் 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
ஏற்கனவே தொடர் தோல்விகளை தழுவிவரும் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து அந்த அணிக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் மிகுந்த நம்பிக்கையளிக்கும் வீரராக திகழ்ந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது விலகல் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு.
பவர்ப்ளேயிலும் பந்துவீசக்கூடிய அருமையான ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர். பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் பின்வரிசையில் பலம் சேர்ப்பார். வாஷிங்டன் சுந்தரை ரூ.8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. ஒரு ஆல்ரவுண்டராக சுந்தர் சன்ரைசர்ஸ் அணிக்கு வலுசேர்த்து வந்த நிலையில் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.