- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: சச்சினின் 36 ஆண்டு சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயது பாலகனின் விஸ்ரூப வளர்ச்சி!
Vaibhav Suryavanshi: சச்சினின் 36 ஆண்டு சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயது பாலகனின் விஸ்ரூப வளர்ச்சி!
Vaibhav Suryavanshi: இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டு சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பிடித்து, கிரிக்கெட் உலகில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், 36 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் பெயரில் இருந்த ஒரு பெரிய சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
சச்சின் சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி
அதாவது 1989-ல் சச்சின் இந்திய அணிக்கு அறிமுகமானபோது, அவருக்கு வயது 16. இத்தனை ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை இப்போது சூர்யவன்ஷி வைபவ் தகர்த்துள்ளார். பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2026 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக விளையாடி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தத் தொடரில் அவர் காட்டியது வெறும் அதிரடி அல்ல, அது ஒரு ஆதிக்கம்.
ஐபிஎல் தொடரில் கலக்கிய 15 வயது பாலகன்
2026 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP), வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்ட்ரைக்கர், அதிக சிக்ஸர்கள் என கிட்டத்தட்ட எல்லா விருதுகளையும் இவரே தட்டிச் சென்றார். ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக, 237.30 என்ற அசாத்தியமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஒரே சீசனில் 72 சிக்ஸர்கள் அடித்து புதிய வரலாற்று சாதனையையும் படைத்தார். இவரது இந்த சிறப்பான ஆட்டம்தான், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இவரை முன்னிறுத்தியுள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்
இந்திய அணி, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு T20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 11 வரை இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து T20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதன்பிறகு, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் போட்டி T20 ஃபார்மெட்டில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஓமன் என மொத்தம் 10 அணிகள் தங்கப் பதக்கத்திற்காகப் போட்டியிடுகின்றன.

