- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் சரியானது தானா? பரபரப்பை பற்ற வைத்த சிஎஸ்கே லெஜண்ட்!
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் சரியானது தானா? பரபரப்பை பற்ற வைத்த சிஎஸ்கே லெஜண்ட்!
டி20 உலகக்கோப்பை பைனலில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் சர்ச்சையான நிலையில், இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார்.

T20 World Cup Suryakumar Yadav Catch Controversy
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கையில் ஏந்தியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது தான். அந்த கேட்ச்சை மட்டும அவர் பிடிக்காமல் போயிருந்தால் அது சிக்சராக மாறி இந்தியா தோல்வி அடைந்திருக்கும்.
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் பிடித்த கேட்ச்
ஆனால் சூர்யகுமாரின் கேட்ச் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. சூர்யகுமாரின் கால் பவுண்டரி கயிற்றை உரசியதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சியும் இது குறித்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஐசிசி விதிகள் படி, பவுண்டரி கயிறு நகர்ந்திருந்தாலும், அதன் அசல் நிலை தான் பவுண்டரியாகக் கருதப்படும். எனவே, சூர்யகுமார் பிடித்த கேட்ச் விதிகளின்படி சரியானதே ஆகும்.
அம்பத்தி ராயுடு விளக்கம்
இந்நிலையில், சூர்யகுமாரின் கேட்ச் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஒரு கருத்தை தெரிவித்து பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அம்பதி ராயுடு, ''டி20 உலகக்கோப்பை பைனல் இடைவேளையின்போது வர்ணனையாளர்கள் அமர்ந்து பேசுவதற்காக நாற்காலி மற்றும் திரைகள் பவுண்டரி லைன் அருகில் வைக்கப்பட்டது.
அப்போது பவுண்டரி லைன் கயிறு சிறிது பின்னுக்குத் தள்ளப்பட்டது. பின்பு நாற்காலி, உபகரணங்கள் அகற்றப்பட்ட போதும் கயிறு அப்படியே தான் இருந்தது. மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படவில்லை'' என்றார்.
மீண்டும் விவாதப்பொருளான கேட்ச்
தொடர்ந்து பேசிய அவர், ''நாங்கள் (கமெண்டேட்டர்கள்) அதை மேலிருந்து பார்க்க முடிந்தது. அது சிக்ஸரா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் கயிறு உள்ளே இருந்திருந்தால், சூர்யா பவுண்டரி லைனை மிதித்து இருப்பார். ஆனால் அது முற்றிலும் சுத்தமான கேட்ச். இறுதியில், கடவுள் நம்முடன் இருந்தார். இது கடவுளின் திட்டம்'' என்று தெரிவித்துள்ளார்.
அம்பத்தி ராயுடுவின் இந்த கருத்து மூலம் சூர்யகுமாரின் கேட்ச் மீண்டும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. இவரின் கருத்து தென்னாப்பிரிக்க வீரர்களின் கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.