#AUSvsIND கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்..! தனித்துவ சாதனையை படைத்த நடராஜன்
ஆஸி., சுற்றுப்பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் தனித்துவ சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நெட் பவுலராக எடுக்கப்பட்டார் தமிழகத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன். ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியில் எடுக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயத்தால் தொடரைவிட்டு விலகியதையடுத்து டி20 அணியில் இடம்பெற்ற நடராஜன், கடைசி டி20யில் ஆடும் லெவனில் வாய்ப்பையும் பெற்றார். சிறப்பாக பந்துவீசி கேப்டன் கோலியின் நன்மதிப்பையும் பெற்றார்.
அதன்விளைவாக, ஒருநாள் அணியிலும் இடம்பெற்ற நடராஜன், நவ்தீப் சைனி காயத்தால் ஆடும் லெவனில் இடம்பெற்று, ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதிலும் அசத்தலாக ஆடினார். ஆனாலும் முதல் தர கிரிக்கெட்டில் பெரியளவில் அனுபவமில்லாத நடராஜன், டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. ஷமி, உமேஷ் யாதவ் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் காயத்தால் வெளியேறிய பிறகு கூட, ஷர்துல் தாகூர் தான் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டார்.
ஆனால் ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா என முன்னணி ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவருமே ஒவ்வொரு போட்டியில் காயத்தால் வெளியேறியதன் விளைவாக, பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் நடராஜன். அறிமுக போட்டியிலேயே, ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இந்திய அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் மேத்யூ வேட் மற்றும் சதமைத்த லபுஷேன் ஆகிய 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் நடராஜன்.
ஆஸி.,க்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானதன் மூலம், ஒரே சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்துவிதமான சர்வதேச ஃபார்மட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடராஜன். இனிமேல், ஒரே சுற்றுப்பயணத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் எந்த இந்திய வீரர் அறிமுகமானாலும் நடராஜனுக்கு அடுத்துதான் அவர்களெல்லாம். வரலாற்று சாதனையை படைத்துவிட்டார் நடராஜன்.