டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக பெய்த மழை; SRH vs DC போட்டி மழையால் ரத்து!
SRH vs DC IPL 2025 Match Abandoned Due to Rain: உப்பல் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 55வது லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

3ஆவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2025 SRH vs DC: எதிர்பார்த்தது போலவே ஹைதராபாத்தில் மழை பெய்தது. இதனால் உப்பல் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் 2025 லீக்கின் 55வது போட்டி ரத்து செய்யப்பட்டது. மழையால் போட்டி ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 புள்ளிகளுடன் 8ஆவது இடம் பிடித்தது.
அதோடு ஐபிஎல் 2025 பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து 3ஆவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதை அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதை பொறுத்து அமையும்.
டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் - பவுலர்களுக்கு சாதகமாக மாறிய பிட்ச்
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. உப்பல் மைதானம் என்றாலே ரன் மழை பொழியும். டெல்லியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால் பேட்ஸ்மேன்கள் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
முதல் பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ்
டெல்லிக்கு ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பாக ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெல்லியை நிலைகுலைய வைத்தார். அற்புதமான பந்துவீச்சால் டெல்லியின் டாப் ஆர்டரை வீழ்த்தினார். பந்துவீச்சாளர்களில் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கருண் நாயர், ஃபாப் டூப்ளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோர் ஆட்டமிழக்கச் செய்தார். டெல்லி அணி முதல் 4 விக்கெட்டுகளையும் விக்கெட் கீப்பர் இஷான் இஷன் கேட்ச் மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ் மோசமான பேட்டிங் – 133/7 ரன்கள்
இப்போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 7 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு கட்டத்தில் 100 ரன்களை கூட தாண்ட முடியாதோ என்று எண்ணத் தோன்றியது. 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (41 ரன்கள்), அஷூதோஷ் சர்மா (41 ரன்கள்) சிறப்பாக ஆடியதால் ஓரளவுக்கு டீசண்டான ஸ்கோரை டெல்லி எட்டியது.
சிறப்பாக பந்து வீசிய சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் எடுத்தார்!
டெல்லி பேட்ஸ்மேன்களில் கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஃபாஃப் டு பிளெசிஸ் 3 ரன்கள், அபிஷேக் போரல் 8 ரன்கள், கே.எல். ராகுல் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி கேப்டன் அக்சர் படேல் 6 ரன்கள், விப்ராஜ் நிஹாம் 18 ரன்கள் எடுத்தனர். டெல்லி ஹைதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், எஷா மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
மழையால் போட்டி ரத்து – இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
டெல்லி கேபபிடல்ஸ் பேட்டிங் முடிந்த பிறகு பலத்த மழை பெய்தது. ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. மேலும், ரன்களும் குறைவு என்பதால் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றிருக்கும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு புள்ளி கூட கிடைத்திருக்கிறது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட அது ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தானதால் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் 2025 தொடரிலிருந்து 3ஆவது அணியாக வெளியேறியது. இதற்கு முன்னதாக சிஎஸ்கே முதல் அணியாக வெளியேறிய நிலையில் 2ஆவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேறியது.