#WIvsSA மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட்.. தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி..! ஆட்டநாயகன் டி காக்
முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், க்ரைக் பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ், பிளாக்வுட், ஹோல்டர் என அனைத்து வீரர்களுமே மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 97 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிக் நோர்க்யா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக் அபாரமாக ஆடி சதமடித்தார். டி காக் 141 ரன்களை குவித்தார். தொடக்க வீரர் மார்க்ரம் 60 ரன்களும், வாண்டர்டசன் 46 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. குயிண்டன் டி காக்கின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 322 ரன்களை குவித்தது.
225 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடினர். ரபாடாவின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் அவரிடம் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நோர்க்யாவின் பவுலிங்கில் 3 விக்கெட்டுகளையும் கேஷவ் மஹராஜின் சுழலில் 2 விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக ஆடிய ஒரேயொரு வீரரான ரோஸ்டன் சேஸ் மட்டும் 62 ரன்கள் அடித்தார்.
2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களில் சுருண்டதையடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. தென்னாப்பிரிக்காவின் அபாரமான ஆட்டத்தால் 10ம் தேதி தொடங்கிய ஆட்டம் மூன்றே நாட்களில்(12ம் தேதியுடன்) முடிந்துவிட்டதுகுயிண்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.