- Home
- Sports
- Sports Cricket
- தோனியை கண்டெடுத்த மாவீரன்! இந்திய அணியை மீட்டெடுத்த 'தாதா' சவுரவ் கங்குலி பிறந்தநாள்!
தோனியை கண்டெடுத்த மாவீரன்! இந்திய அணியை மீட்டெடுத்த 'தாதா' சவுரவ் கங்குலி பிறந்தநாள்!
கடினமான காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியை மீட்டெடுத்த தாதா சவுரங் கங்குலியின் பிறந்த நாள் இன்று. தோனியை கண்டெடுத்து இந்திய அணியின் வடிவமைப்பை மாற்றிய கங்குலி குறித்து விரிவாக பார்க்கலாம்.

Sourav Ganguly Birthday Today
இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ், சுனிஸ் கவாஸ்கர், சச்சின், தோனி என எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தாலும் இவர் ஒருவரின் பெயர் இடம்பெறாமல் அந்த பட்டியல் பூர்த்தி அடையாது. அவர்தான் 'கிரிக்கெட்டின் தாதா' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படும் கங்குலி இந்திய அணிக்கு புதிய பாய்ச்சலை கொண்டு வந்ததில் முக்கியமானவர். கங்குலி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவர் இந்திய அணிக்கு செய்த பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
சவுரவ் கங்குலி என்னும் மாவீரன்
ஜூலை 8, 1972 அன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்த சவுரவ் கங்குலி செல்வ செழிப்பான குடும்ப பின்னணியை கொண்டவர். சிறு வயது முதல் கால்பந்தில் ஆர்வம் கொண்ட கங்குலி, தனது சகோதரர் அறிவுறுத்தலின்பேரில் கிரிக்கெட் பக்கம் திரும்பினார். ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தரப் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து 1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இந்திய அணியை மீட்டெடுத்தவர்
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து படிப்படியாக தனது திறமையை நிரூபித்து இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்த சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு புதிய வடிவம் கொடுத்தவர் என்றே சொல்லலாம். குறிப்பாக 2000களில் மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்து இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வ்ந்தார்.
தோனியை அறிமுகம் செய்தவர்
இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி திருப்பிய கங்குலி வெளிநாடுகளிலும் வெற்றி பெறக்கூடிய ஒரு வலிமையான அணியாக இந்தியாவை மாற்றினார். கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனியை அறிமுகப்படுத்தியவர் கங்குலி தான். தோனியின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்பளித்ததில் கங்குலிக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்வரிசையில் களமிறங்கிய தோனியை முன்வரிசையில் ஆட வைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றியவர் கங்குலி.
லார்ட்ஸ் பால்கனியில் சட்டையை கழற்றியதை மறக்க முடியுமா?
மேலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப் போன்ற பல ஸ்டார் வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தி அவர்களையும், அணியையும் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் கங்குலி. சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் இந்தியா 2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2002 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி முத்தரப்பு தொரில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. அப்போது கேப்டன் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் தனது சட்டையைக் கழற்றி கொண்டாடிய நிகழ்வு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் வென்ற முதல் கேப்டன்
சிறந்த பேட்ஸ்மேன், பவுலராகவும் வலம் வந்த சவுரவ் கங்குலி வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன்களில் முக்கியமானவர். குறிப்பாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை இவரையே சேரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கங்குலி கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
துணிச்சல், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பண்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக சில காலம் பணியாற்றிய கங்குலி இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக விளங்கினார். இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய கங்குலியின் ஆக்ரோஷம், துணிச்சல் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பண்பு ஆகியவை என்றென்றும் போற்றப்படும்.