#IPL2021 டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படும் ஷ்ரேயாஸ் ஐயர்?
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 14வது சீசனில் ஆடவில்லை. அதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது கேப்டன்சியில் அபாரமாக ஆடி டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது.
எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. தோள்பட்டை காயத்திலிருந்து கிட்டத்தட்ட மீண்டுவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், எனது தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டுவருகிறேன். முழு ஃபிட்னெஸை அடையவிருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் முழு ஃபிட்னெஸை அடைந்துவிடுவேன். ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடுவேன் என்று நம்புகிறேன். ஆனால் கேப்டன்சி குறித்து எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அணி உரிமையாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே டெல்லி அணி நன்றாகத்தான் ஆடியிருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் டெல்லி அணி சிறப்பகா செயல்பட்டு முதல் முறையாக கோப்பையை வெல்வது தான் முக்கியம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.