- Home
- Sports
- Sports Cricket
- IND vs WI: சாய் சுதர்சனுக்கு என்னாச்சு? 3வது நாள் களத்துக்கே வரவில்லை.. இதுதான் காரணம்!
IND vs WI: சாய் சுதர்சனுக்கு என்னாச்சு? 3வது நாள் களத்துக்கே வரவில்லை.. இதுதான் காரணம்!
இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று பீல்டிங் செய்ய வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

India vs West Indies Test
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 518 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாலோ ஆன் ஆனதால் அந்த அணி தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
சாய் சுதர்சன் காயம்
இந்த நிலையில் மூன்றாவது நாளில் இந்திய வீரர் சாய் சுதர்சன் பீல்டிங் செய்ய களத்தில் இறங்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சாய் சுதர்சன் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸின் ஆரம்பத்தில், ஷார்ட் லெக் இடத்தில் ஃபீல்டிங் செய்தபோது அவரது கையில் பந்து பலமாகத் தாக்கியது. ஜான் கேம்பல் ஸ்வீப் ஷாட் அடிக்க, பந்து சுதர்சனின் கையில் பலமாகப் பட்டுச் சென்றது. சுவாரஸ்யமாக, பந்து இவ்வளவு பலமாகத் தாக்கிய போதிலும், அவர் பந்தைக் கைப் பிடித்து பேட்டரை வினோதமான முறையில் அவுட்டாக்கினார்.
இன்று களமிறங்கவில்லை
ஆனால் பந்து கையைத் தாக்கியதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் உடனே பிசியோ அவருக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகு சாய் சுதர்சன் களத்தை விட்டு வெளியேறினார். மூன்றாவது நாளான இன்று அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இன்று களத்தில் இறங்கவில்லை என்றும், தற்போது அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ விளக்கம்
''சாய் சுதர்சனுக்கு இரண்டாவது நாளில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ஒரு காயம் (impact injury) ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இன்று களத்தில் இறங்கவில்லை. காயம் தீவிரமானது அல்ல, அவர் நன்றாக இருக்கிறார். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்'' என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
சதத்தை நழுவ விட்ட சாய்
இந்தக் காயத்திற்கு முன்பு சாய் சுதர்சன் பேட்டிங்கில் பட்டய கிளப்பினார். அவர் 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் கூட்டுச் சேர்ந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக 87 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.