#AUSvsIND அமைதியா இருக்குறவன் ஆக்ரோஷமானவன் இல்லனு அர்த்தம் இல்ல..! ரஹானேவை மெச்சிய மாஸ்டர் பிளாஸ்டர்
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வித்தியாசமான திட்டங்கள் மற்றும் உத்தியுடன் அணுகும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடவில்லை என்பதால், ரஹானே கேப்டன்சி செய்கிறார்.
2வது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ள நிலையில், ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வித்தியாசமான தந்திரங்கள் மற்றும் உத்தியுடன் களமிறங்கும் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ரஹானே இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்தியிருக்கிறார். அவர் அமைதியானவர் என்பதால் ஆக்ரோஷமானவர் இல்லை என்று அர்த்தமல்ல. ஒவ்வொருவரும் அவர்களது பாணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். ஆக்ரோஷத்தை வெளிக்காட்டவில்லை என்பதற்காக, எவரும் ஆக்ரோஷமானவர் இல்லை என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டுக்கு புஜாராவை எடுத்துக்கொள்வோம். புஜாரா மிகவும் அமைதியானவர்; நிதானமானவர். அவரது உடல்மொழி முழுவதும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாகவே இருக்கும். அதற்காக புஜாரா எவருக்கும் சளைத்தவர் இல்லை.
ஒவ்வொரு சூழலையும் ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் விதம் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அனைவரின் இலக்கும் ஒன்றுதான். அதை அடையும் ரூட் வேறு வேறு. அப்படித்தான் இந்திய அணியை ஜெயிக்க வைக்க முடியும். எனவே ரஹானே வித்தியாசமான ஸ்டைல் மற்றும் உத்திகளுடன் இறங்குவார். உத்திகள் அணி நிர்வாகத்தை பொருத்தவை. பிட்ச், பேட்டிங், பவுலிங் என பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கித்தான் அணியின் திட்டம் இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.