India vs Australia:சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த ரிங்கு சிங் – கடைசில நோபால் கொடுத்து நடுவர்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த நிலையில், நடுவர் நோபால் என்று அறிவித்தார்.
India vs Australia 1st T20 Match
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 208 ரன்கள் எடுத்தது.
ரிங்கு சிங்
பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
IND vs AUS T20 Match
அதன் பிறகு வந்த திலக் வர்மா 12 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஒரு கேப்டனாக தனது அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், கேஎல் ராகுலைத் தொடர்ந்து ஒரு கேப்டனாக டி20 போட்டியில் அரைசதம் அடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்தார். இதையடுத்து சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர், 42 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 80 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டி
கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் மற்றும் ரிங்கு சிங் இருவரும் களத்தில் இருந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு, 2ஆவது பந்தில் லெக் பைஸ் மூலமாக ஒரு ரன் எடுத்தனர். 3ஆவது பந்தில் அக்ஷர் படேல் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் ரவி பிஷ்னோய் ரன் அவுட் முறையில் வெளியேறினார். 5ஆவது பந்தில் ரிங்கு சிங் 2 ரன்கள் ஓட முயற்சித்த நிலையில், அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டானார். கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.
Rinku Singh
ரிங்கு சிங் பேட் செய்யவே, சீன் அப்பாட் பந்து வீசினார். அதில், சிக்ஸ் அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், நடுவரோ அது நோபால் என்று அறிவித்தார். ஆதலால், அவர் அடித்த சிக்ஸிற்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. கடைசியாக இந்தியா 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.