திடமான முடிவெடுக்க முடியாமல் அல்லல்படும் இந்திய அணி..! அவருக்குத்தான் அழுத்தம் அதிகம்.. பாண்டிங் அதிரடி
விராட் கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் 4ம் இடத்தில் களமிறங்கும் வீரர் குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் ஒருநாள் தொடர், அதன்பின்னர் டி20 தொடர், கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகிறார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
கோலி ஆடாததால், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே தான் கேப்டனாக செயல்படுவார் என்பதால், ரஹானே மீதான அழுத்தத்தை கேப்டன்சி பொறுப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ள பாண்டிங், கோலியின் 4வது பேட்டிங் ஆர்டரில் யார் இறங்கப்போவது என்ற தெளிவு இந்திய அணியிடமே இல்லை எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசியுள்ள பாண்டிங், கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது, இந்திய அணியில் மற்ற வீரர்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார். அது அவருக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும்.
கோலி இறங்கும் முக்கியமான பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் யாரை இறக்குவது என்பது குறித்து இந்திய அணி முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த தெளிவான பார்வை இந்திய அணியிடம் இல்லை என்றே நினைக்கிறேன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இறங்கப்போவது யார்? கோலி ஆடாத போட்டிகளில் 4ம் வரிசையில் இறங்கப்போவது யார்? என்ற தெளிவெல்லாம் இந்திய அணியிடம் இல்லை என்று பாண்டிங் தெரிவித்தார்.