ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஆடலாம்? ரோஹித் & டிராவிட்டுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த செம ஐடியா
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யாரை இறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் ஆலோசனை கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறிவிட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியும் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். கடைசி போட்டியில் ஜெயிக்காவிட்டாலும், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்யாவிட்டால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும்.
இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறத்தான் அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவலில் நடக்கும் ஃபைனலில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் பெரிய பிரச்னைக்கு தீர்வு கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங். கேஎல் ராகுல் டெஸ்ட்டில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக டெஸ்ட்டில் தொடக்கவீரராக படுமோசமாக ஆடியிருக்கிறார். அதன் விளைவாகத்தான், டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு, இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவரும் சோபிக்கவில்லை. 4வது டெஸ்ட்டிலும் கில் தான் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் கில் - ராகுல் இருவரில் யார் ஆடவெண்டும் என்பது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் மற்றும் கில் இருவருமே நன்றாக ஆடியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இருவருமே லண்டன் ஓவலில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடலாம். கில்லை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கலாம். ராகுல் இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர். எனவே வரை மிடில் ஆர்டரில் ஆடவைக்கலாம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.