அவரை குறைத்து மதிப்பிட்டதால் வந்த வினை..! ஆஸி., வீரர்களை கடிந்து இந்திய வீரருக்கு கெத்தை ஏற்றிவிட்ட பாண்டிங்
ஆஸ்திரேலிய வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வினை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே அடித்தது. கேப்டன் விராட் கோலியை தவிர வேறு யாருமே அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, பும்ரா மற்றும் அஷ்வினின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் 79 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் லபுஷேன் மட்டும் நிலைத்து நின்று 119 பந்துகளை எதிர்கொண்டு ஆடினார். ஆனால் அவரும் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தி கெத்து காட்டினார் உமேஷ் யாதவ். லபுஷேன் ஆட்டமிழந்த பின்னர், கேப்டன் டிம் பெய்ன் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், 191 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. டிம் பெய்ன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்தார்.
53 ரன்கள் முன்னிலையுடன் 2ம் நாள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது.
ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான, ஸ்பின்னிற்கு பெரிதாக எடுபடாத ஆஸி., ஆடுகளத்தில், இந்திய ஸ்பின்னர் அஷ்வினிடம் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸி., அணி. அதுவும் முக்கியமான விக்கெட்டுகள். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித்தை ஒரு ரன்னுக்கு வீழ்த்தி தனது விக்கெட் கணக்கை தொடங்கிய அஷ்வின், அதன்பின்னர் டிராவிஸ் ஹெட்(7), கேமரூன் க்ரீன்(11) மற்றும் நேதன் லயன்(10) ஆகியோரையும் வீழ்த்தினார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தினார். அஷ்வினின் பவுலிங் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது.
இந்நிலையில், அஷ்வினை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் குறைத்து மதிப்பிட்டு, அவரது பவுலிங்கை அடித்து ஆடியதால் தான் விக்கெட்டுகளை இழந்தனர் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேனல் 7ல் பேசிய ரிக்கி பாண்டிங், அஷ்வின் பவுலிங்கில் ஆக்ரோஷமாக அடித்து ஆட நினைத்தனர் ஆஸி., பேட்ஸ்மேன்கள். அஷ்வினை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவரது பவுலிங்கில் அடித்து ஆடி ஸ்கோர் செய்ய நினைத்தனர். அதை செய்திருக்கக்கூடாது என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.