RCB: ஆர்சிபி அணி விற்பனை?.. அட! வாங்கப் போவது இவரா? முழு விவரம்!
RCB Team: ரசிகர்களின் அளப்பரிய வரவேற்பை பெற்ற ஆர்சிபி அணியை யுஎஸ்எல் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

RCB Team Sale
அகமதாபாத்தில் நடந்த 18வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
சின்னசாமி மைதானத்துக்கு வெளியே கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆர்சிபி அணி விற்பனை
இந்நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம் அணியை விற்க முடிவு செய்துள்ளது. யுஎஸ்எல் (USL) என்பது லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோவின் (Diageo) துணை நிறுவனமாகும்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) ஆதார் பூனாவாலா, ஆர்சிபி அணியை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபியை வாங்கப் போவது யார்?
சிஎன்பிசி டிவி18 (CNBC TV18) அறிக்கையின்படி, யுஎஸ்எல் (USL) நிறுவனம் $2 பில்லியன் (தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 17,762 கோடி) மதிப்பில் ஆர்சிபி அணியை விற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டியாஜியோ (Diageo) ஆர்சிபி-ஐ விற்கத் தயாராக இருப்பதாக வதந்தி பரவியது, ஆனால் அவர்கள் அந்தச் சமயத்தில் இந்த ஊகங்களை மறுத்திருந்தனர்.
விற்பனையை உறுதி செய்த லலித் மோடி
இதற்கிடையில் ஐபிஎல்-லின் முதல் ஆணையர் லலித் மோடி, 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் (X) தனது ட்வீட் மூலம் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், ''ஒரு ஐபிஎல் அணியின் விற்பனை பற்றிய பல வதந்திகள் தொடர்ந்து வந்தன. கடந்த காலத்தில், அவை மறுக்கப்பட்டன. ஆனால், உரிமையாளர்கள் இறுதியாக அதை தங்கள் நிதிநிலை அறிக்கையிலிருந்து (balance sheet) நீக்கி விற்க முடிவு செய்தது போல் தெரிகிறது.
கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்றது மற்றும் அதன் வலுவான ரசிகர்கள், சிறந்த நிர்வாகத்துடன், ஒட்டுமொத்தமாக விற்கப்படக்கூடிய ஒரே அணியாக இது இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.