IPL 2023: இந்த சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.! அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி
ஐபிஎல் 16வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக தொடங்கின.
ஆனால் போகப்போக ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, லக்னோ அணிகள் சில தோல்விகளை அடைய, அதேவேளையில் ஆரம்பத்தில் தோல்விகளை தழுவிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற, இப்போது இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் தலா 5 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் 2ம் மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 9 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முறையே 4, 5 மற்றும் 6ம் இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர் வெற்றிகளின் மூலம் டிராக்கிற்கு வந்துவிட்டதால் இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருப்பதால் போட்டியும் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ரவி சாஸ்திரி ஆருடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, இப்போதைய ஃபார்ம் மற்றும் ஸ்டாண்டிங்கை பார்க்கையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது குஜராத் அணி. மேலும் அணியில் நல்ல நெகிழ்வுத்தன்மை உள்ளது. எந்த குறிப்பிட்ட வீரரையும் அந்த அணி சார்ந்து இருக்கவில்லை. அணியில் 7-8 வீரர்கள் சிறப்பாக ஆடி போட்டிகளை ஜெயித்து கொடுக்கின்றனர். எனவே குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.