#IPL2021Auction நீண்ட கால ஆசை; ரொம்ப நன்றி சிஎஸ்கே - புஜாரா
ஐபிஎல்லில் தன்னை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார் புஜாரா.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில், யாருமே எதிர்பார்த்திராத விதமாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை ரூ.50 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணி புஜாராவை ஏலத்தில் எடுத்ததை மற்ற அணிகளை சேர்ந்தவர்கள் கைதட்டி வரவேற்பளித்தனர்.
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஐபிஎல்லில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். அந்தவகையில் 2014ம் ஆண்டுக்கு பிறகு புஜாராவை எந்த அணியும் ஏலத்தில் எடுத்ததே இல்லை. ஆனால் ஒவ்வொரு சீசனிலும் தனது பெயரை கொடுப்பார் புஜாரா. ஆனாலும் எந்த அணியும் அவரை எடுக்காது. இம்முறை சிஎஸ்கே அணி, இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்த புஜாராவை கௌரவப்படுத்தும் விதமாக அவரை அணியில் எடுத்தது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புஜாரா, நீண்டகாலமாகவே டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பது என் விருப்பம். ஐபிஎல் மூலமாக நிறைய இளம் திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ளனர். என்னை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணிக்கு மிக்க நன்றி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐபிஎல்லில் கவனம் செலுத்துவேன். ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட செல்வேன். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன் கவுண்டியில் ஆட போதுமான நேரம் இருக்கிறது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.