- Home
- Sports
- Sports Cricket
- WTC புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான்! 2வது இடம்! இந்திய அணி எந்த இடம்?
WTC புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான்! 2வது இடம்! இந்திய அணி எந்த இடம்?
WTC Points Table: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் 2வது இடம் பிடித்துள்ளது. இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

WTC புள்ளிப் பட்டியல்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. லாகூர் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் இந்தியாவை நான்காவது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 277 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, நான்காம் நாளில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா முதலிடம்
பாகிஸ்தானின் வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விளையாடிய மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 100 ஆகும். அந்த அணிக்கு 36 புள்ளிகளும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக வென்றிருந்தது.
பாகிஸ்தான் 2வது இடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதிய சீசனில் பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், அந்த அணிக்கு 100 வெற்றி சதவீதம் உள்ளது. பாகிஸ்தானிடம் 12 புள்ளிகள் உள்ளன. தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, ஒரு டிரா மற்றும் ஒரு வெற்றியுடன் உள்ளது. இலங்கைக்கு 66.67 வெற்றி சதவீதம் மற்றும் 16 புள்ளிகள் உள்ளன.
இந்தியா 4வது இடம்
ஏழு போட்டிகளை முடித்துள்ள இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இதில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வி மற்றும் ஒரு டிரா அடங்கும். இந்தியாவுக்கு 61.90 வெற்றி சதவீதம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தனது வெற்றி சதவீதத்தை அதிகரித்தது. இந்திய அணிக்கு 52 புள்ளிகள் உள்ளன.
ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து
ஐந்து டெஸ்டில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா உட்பட 26 புள்ளிகள் மற்றும் 43.33 வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து, புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்குப் பின் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இரண்டு டெஸ்டில் ஒரு தோல்வி, ஒரு டிரா உட்பட நான்கு புள்ளிகள் மற்றும் 16.67 வெற்றி சதவீதத்துடன் வங்கதேசம் ஆறாவது இடத்தில் உள்ளது.
வங்கதேசத்திற்குப் பின்னால் தென்னாப்பிரிக்கா உள்ளது. விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் எட்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.