- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA: முத்துசாமி அசத்தல் சதம்.. யான்சன் சிக்சர் மழை.. இந்திய பவுலர்களை கதற விட்ட தென்னாப்பிரிக்கா!
IND vs SA: முத்துசாமி அசத்தல் சதம்.. யான்சன் சிக்சர் மழை.. இந்திய பவுலர்களை கதற விட்ட தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2nd Test: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முத்துசாமியின் அசத்தல் சதம், யான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்தது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர் செனுரன் முத்துசாமி (109) தனது முதல் சதத்தை விளாசினார். மார்கோ யான்சன் அதிரடியாக 93 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தை 246-6 என்ற ஸ்கோரில் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, முதல் செஷனில் விக்கெட் இழக்காமல் ஆடியது.
முத்துசாமி சூப்பர் சதம்
இரண்டாவது செஷனில் கைல் வெர்ரெய்னின் (45) விக்கெட்டை இழந்தாலும், முத்துசாமி மற்றும் யான்சன் இணைந்த 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் தென்னாப்பிரிக்காவுக்கு வலுவான ஸ்கோரை உறுதி செய்தது. முத்துசாமி தனது சதத்தை நிறைவு செய்தார்.
88 ரன்களில் இருந்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 98 ரன்களை எட்டினார். பின்னர், முகமது சிராஜ் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சூப்பர் சதம் விளாசினார்.
மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர்
இந்தியாவுக்கு எதிராக ஏழாவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த மூன்றாவது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை முத்துசாமி பெற்றார். இதற்கு முன்பு 2019-ல் குயின்டன் டி காக்கும், 1997-ல் லான்ஸ் குளூஸ்னரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
சதம் அடித்த பிறகு சிராஜ் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முத்துசாமியின் இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய சைமன் ஹார்மரை (5) பும்ரா போல்டாக்கினார். ஹார்மருடன் சேர்ந்து யான்சன் 31 ரன்கள் சேர்த்தார்.
யான்சன் சிக்சர் மழை
கடைசி வீரராக களமிறங்கிய கேசவ் மகாராஜுடன் இணைந்து யான்சன் 27 ரன்கள் சேர்த்தார். ஆனால், சதத்தை எட்டுவதற்கு முன்பு குல்தீப் யாதவ் பந்துவீச்சில் யான்சன் போல்டானார். 91 பந்துகளை சந்தித்த அவர், 7 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளை அடித்தார்.
இந்தியாவுக்காக குல்தீப்பைத் தவிர, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் (2), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7) ஆகியோர் களத்தில் உள்ளனர்.நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

