நியூசி.,க்கு எதிராக செய்த தவறை இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து செய்யக்கூடாது - மைக்கேல் வான்
நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் செய்த தவறை இந்தியாவுக்கு எதிரான தொடரில் செய்யக்கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 388 ரன்களை குவித்தது.
85 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 122 ரன்களுக்கு சுருண்டது. 38 ரன்கள் என்ற எளிய இலக்கை 2வது இன்னிங்ஸில் எளிதாக அடித்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆண்டர்சன், பிராட், மார்க் உட், ஆலி ஸ்டோன் ஆகிய 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது. ஒரு ஸ்பின்னரை கூட அணியில் எடுக்கவில்லை. அதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கருதும் மைக்கேல் வான், அடுத்ததாக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக ஆடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வான், உத்தி ரீதியாக இங்கிலாந்து அணி தவறு செய்துவிட்டது. எட்ஜ்பாஸ்டனில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது வறண்ட கண்டிஷனில் வேரியேஷன் தேவை. 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடிய இங்கிலாந்து அணி, அதில் ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு பதிலாக ஸ்பின்னர் ஜாக் லீச்சை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இந்த தவறை செய்துவிடக்கூடாது என்றார் மைக்கேல் வான்.