இந்திய அணி டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்னா கோலி சுயநலமா இருந்தே தீரணும்..! மைக்கேல் வான் அட்வைஸ்
இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், விராட் கோலி சுயநலத்துடன் ஆடியாக வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. வழக்கமாக ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது ஒரு சதமாவது அடித்துவிடும் விராட் கோலி, ஆஸி., சுற்றுப்பயணம் முழுவதுமே சரியாக ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் சரியாக ஆடவில்லை. ரன்னே அடிக்காமல் சில இன்னிங்ஸ்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். விராட் கோலி அண்மைக்காலமாக ஸ்கோர் செய்யமுடியாமல் தவித்துவரும் நிலையில், கோலி சுயநலத்துடன் பேட்டிங் ஆடினால் தான் இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஜொலிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வான், இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிப்பதற்கும், டி20 உலக கோப்பையை வெல்வதற்கும், விராட் கோலி முக்கியமான வீரர். விராட் கோலி நன்றாக ஆடினால் தான் இந்தியா ஜெயிக்க முடியும். கோலி சுயநலமாக ஆடினால் தான் அவரால் ஜொலிக்க முடியும். கோலிக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் என்பதெல்லாம் இல்லை. அவர் களத்திற்கு வந்த முதல் சில பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை என்றாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட வேண்டும். அவர் அப்படி சுயநலத்துடன் ஆடியாக வேண்டும்.
ஏனெனில் முதல் சில பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை என்றாலும், அதன்பின்னர் ஒருசில பவுண்டரிகள் கிடைத்துவிட்டால் போதும்; அதன்பின்னர் வழக்கமான கோலியை நம்மால் பார்க்க முடியும் என்று மைக்கேல் வான் தெரிவித்தார்.