பணத்தைவிட குடும்பம் தான் முக்கியம்..! ஐபிஎல் ஏலத்திலிருந்து பெயரை விலக்கிக்கொண்ட ஃபாரின் ஃபாஸ்ட் பவுலர்
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திலிருந்து தனது பெயரை விலக்கிக்கொண்டுள்ளார் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இந்த ஏலத்திற்கு விண்ணப்பித்திருந்த 1144 வீரர்களில் 292 வீரர்கள் இறுதி ஏலத்திற்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் ரூ.2 கோடி அடிப்படை விலை கொண்ட இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டும் ஒருவர்.
தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்,ஒருநாள், டி20 தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணியில் இடம்பெற்று இந்தியாவில் இருக்கிறார் மார்க் உட். இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் மார்ச் 28ம் தேதி தான் முடிவடைகிறது.
எனவே நீண்ட தொடரை முடித்த பின்னர், தொடர்ச்சியாக ஐபிஎல்லில் ஆடாமல், தனது குடும்பத்துடன் இருக்க விரும்பிய மார்க் உட், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திலிருந்து தனது பெயரை விலக்கிக்கொண்டுள்ளார். மார்க் உட் மீது சில அணிகள் ஆர்வமாக இருந்த நிலையில் ஐபிஎல்லுக்கு ஒருநாளைக்கு முன்பாக, நேற்றைய தினம், ஏலத்திலிருந்து விலகினார் மார்க் உட்.