ஐபிஎல் ஏலத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இலங்கை வீரர்கள்..! என்ன காரணம்.? முரண்படும் சங்கக்கரா - ஜெயவர்தனே
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர் கூட எடுக்கப்படாததற்கான காரணம் என்னவென்று இலங்கை முன்னாள் ஜாம்பவான்களான குமார் சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே ஆகிய இருவரும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. . ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள். அனைத்து அணிகளுமே ஃபாஸ்ட் பவுலர்களை எடுப்பதிலேயே ஆர்வம் காட்டின.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாட்டு வீரர்களுக்கு கிராக்கி இருந்த நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய சில சிறந்த இலங்கை வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயரை கொடுத்திருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அதற்கான காரணமாக, வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர் சங்கக்கராவும் ஜெயவர்தனேவும். இதுகுறித்து பேசிய சங்கக்கரா, சில சிறந்த வீரர்களின் பெயர் ஏலத்தில் இருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு திடீரென கமிட் ஆகும். அதனால், இலங்கை வீரர்கள் முழு ஐபிஎல் சீசனிலும் ஆடமுடியாமல் வெளியேற வேண்டி வந்தால் சிக்கல். அதனால் தான் இலங்கை வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்று சங்கக்கரா தெரிவித்தார்.
ஆனால் இலங்கை வீரர்கள் எடுக்கப்படாததற்கு வேறு காரணத்தை கூறியுள்ளார் ஜெயவர்தனே. இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே, ஒரு இலங்கை வீரர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், 20 வெளிநாட்டு வீரர்களை எடுக்க மட்டுமே ஒட்டுமொத்த ஏலத்தில் இடமிருந்தது. அனைத்து அணிகளுமே ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களை எடுத்தன. அந்த விஷயத்தில் இலங்கை வீரர்கள் மிகச்சிறப்பாக இல்லாததால்தான் எந்த அணியாலும் இலங்கை வீரர்களை எடுக்க முடியவில்லை என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.