- Home
- Sports
- Sports Cricket
- IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
IND vs IRE 2nd T20: 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவை 2-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து மாஸ் காட்டியுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்ற அயர்லாந்து
பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று உலக சாம்பியன் இந்தியாவை வொயிட் வாஷ் செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக முதன் மும்றையாக தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்பல்
அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 47 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். பெஞ்சமின் கால்டிஸ் 37 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 155 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் (0), அபிஷேக் சர்மா (0) இருவரும் கோல்டன் டக் ஆகி வெளியேறினர். ஜே முந்த்ரா வீசிய முதல் ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழந்தனர்.
அயர்லாந்து அணி சரித்திர சாதனை
மேலும் முன்னணி வீரர்கள் இஷான் கிஷன் (12), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (10) சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அக்சர் படேலும் (14) சோபிக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த திலக் வர்மா 46 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 55 ரன்கள் அடித்தார். ஷிவம் துபே 20 ரன்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஹர்சித் ராணா 10 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து போராடினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் பிரின்ஸ் யாதவ் சிக்சர் அடித்த நிலையில், இந்திய அணி 153 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக தொடரை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

