- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் டிக்கெட் மோசடி! கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் அதிரடி கைது! பரபரப்பு தகவல்!
ஐபிஎல் டிக்கெட் மோசடி! கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் அதிரடி கைது! பரபரப்பு தகவல்!
ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Hyderabad Cricket Association President Arrested in IPL Ticket Scam
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின்போது ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டிக்கெட் மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீசார் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன் மோகன் ராவ் உட்பட ஐந்து அதிகாரிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் டிக்கெட் மோசடி
அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஜே.எஸ். ஸ்ரீனிவாச ராவ், தலைமை நிர்வாக அதிகாரி சுனில் காண்டே, ஸ்ரீ சக்ரா கிரிக்கெட் கிளப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர யாதவ் மற்றும் ஸ்ரீ சக்ரா கிரிக்கெட் கிளப்பின் தலைவர் ஜி. கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
"நிதி மோசடி, தவறான நிர்வாகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார். ஐபிஎல் 2025 சீசனின் போது ராவ் மற்றும் பலர் மீது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிஐடி காவலில் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சன்ரைசர்ஸ் நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னதாக, ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) இடையே பெரும் மோதல் மூண்டது.
அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் ஹைதராபாத் மைதானத்தை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிரட்டல் விடுத்து இருந்தது.
எச்.சி.ஏ தலைவர் ஜெகன்மோகன் ராவ் டிக்கெட் பாஸ்களுக்காக தங்களை கடுமையாக துன்புறுத்துவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது.
இலவச பாஸ்களுக்காக தொல்லை
மேலும் சன்ரைசர்ஸ் பொது மேலாளர் டி.பி.ஸ்ரீநாத், ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொருளாளர் சி.ஜே.ஸ்ரீனிவாஸ் ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்க அதிகாரிகள், குறிப்பாக தலைவர் ஏ.ஜெகன்மோகன் ராவ், இலவச பாஸ்களுக்காக தொல்லை தருவது தீவிரமடைந்துள்ளது. இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று டி.பி.ஸ்ரீநாத் கூறியிருந்தார்.
ஹைதராபாத்தை விட்டு வெளியேறப் போவதாக சொன்ன SRH
கடந்த இரண்டு பருவங்களாக HCA தனது ஊழியர்களுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விஷயத்தை HCA வின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் கூறினார். HCAவின் நடத்தையைப் பார்க்கும்போது, SRH இந்த ஸ்டேடியத்தில் விளையாடக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
தெலங்கானா முதல்வர் அதிரடி உத்தரவு
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் ஜெனரல் கே.ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
கிரிக்கெட் போட்டிகளுக்கான பாஸ் கேட்டு எஸ்ஆர்எச் நிர்வாகத்திற்கு யாராவது பிரச்சனைகளை ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் தான் டிக்கெட் மோசடி தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

