#AUSvsIND செம அடி; அவரால் கையை தூக்கக்கூட முடியல.! இந்திய ரசிகர்களுக்கு கெட்ட செய்தி சொன்ன கோலி
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஷமி காயத்தால் அவதிப்படுவதாக கேப்டன் கோலி தெரிவித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதற்கடுத்து நடக்கவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடாமல் இந்திய அணி கேப்டன் கோலி இந்தியா திரும்பவுள்ள நிலையில், அவர் ஆடிய ஒரு போட்டியிலும் இந்திய அணி தோற்றுவிட்டது. அவர் ஆடாத 3 போட்டிகளில் இந்திய அணியின் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.
அடுத்த 3 போட்டிகளில் கோலி ஆடாததே பெரும் பின்னடைவாக அமையும். இதற்கிடையே ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியின் காயம் இந்திய அணிக்கு பீதியை கிளப்பியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பிரைம் ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ராவும் ஷமியும் தான். இந்நிலையில், 2வது இன்னிங்ஸில் ஷமி பேட்டிங் ஆடும்போது, கம்மின்ஸின் பவுன்ஸரில் வலது கையில் ஷமிக்கு அடிபட்டது. அத்துடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அடிபட்டதுமே ஷமி வலியால் துடித்தார். அப்போதே பெரிய அடி என்பது போலத்தான் இருந்தது.
கோலி அடுத்த போட்டியில் ஆடாத நிலையில், ஷமியும் ஆடமுடியாமல் போனால், இந்திய அணிக்கு அது கடும் பாதிப்பாக அமையும். போட்டிக்கு பின்னர் ஷமியின் காயம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, ஷமியின் காயம் குறித்த அப்டேட் இல்லை. அவருக்கு மிகுந்த வலி இருந்திருக்கிறது. அவரால் கையை தூக்கக்கூட முடியவில்லை என்று கோலி தெரிவித்தார்.