கடைசி வரை கேப்டனாக வர முடியாத இந்திய வீரர்கள்? யுவராஜ் சிங், ஜாகீர் கான் கூட கேப்டன் இல்லையா?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்பட முக்கிய ஜாம்பவான்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு எத்தனையோ வெற்றிகளை தேடிக் கொடுத்த போதிலும் அவர்களுக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு மட்டுமே கிடைக்கவே இல்லை. அப்படிப்பட்ட வீரர்கள் யார்? யார்? என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…
ஹர்பஜன் சிங்:
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்தார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளும், 236 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால், சர்வதேச போட்டிகளில் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜாகீர்கான்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான். இவர், 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளும், 200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். தனது சிறப்பான பந்து வீச்சு காரணமாக இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஜாகீர்கானுக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 முறை 10 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட அஸ்வினுக்கு இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
விவிஎஸ் லட்சுமணன்:
நிலையாக நின்று அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பவர் என்றால் அது விவிஎஸ் லட்சுமணன் தான். இந்தியாவிற்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், இந்திய அணிக்கு கேப்டன் வாய்ப்பு மட்டுமே கடைசி வரையில் கிடைக்கவில்லை.
யுவராஜ் சிங்:
பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் இந்திய அணிக்கு தன்னால் முடிந்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் யுவராஜ் சிங். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தவர். ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த யுவராஜ் சிங்கால் இந்திய அணிக்கு கேப்டனாக முடியவில்லை.