ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்
ரிஷப் பண்ட் திரும்ப வருவது என்பது எங்களுக்கு முக்கியமானது என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து
இந்தியா வந்துள்ளா நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது.
இந்தியா - ஹைதராபாத் ஒரு நாள் போட்டி
முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்து முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ராய்ப்பூர் 2ஆவது ஒரு நாள் போட்டி
இதைத் தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
இந்தூர் - 3ஆவது ஒரு நாள் போட்டி
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்துள்ளனர்.
உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில்
இந்தூர் வந்த இந்திய அணி வீரர்கள் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன் பிறகு ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் சூர்யகுமார் யாதவ் கூறியிருப்பதாவது: நாங்கள் ரிஷப் பண்டிற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்தோம். அவர் திரும்ப வருவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட் கார் விபத்து
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தசைநார்கள்
தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடு திரும்பும் ரிஷப் பண்ட்
அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
மருத்துவ பரிசோதனை
அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.