பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய வங்கதேச புலிக்கு பாடம் புகட்டிய டீம் இந்தியா: 2-0 என்று வங்கதேசம் ஒயிட்வாஷ்!
IND vs BAN, Kanpur 2nd Test: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தோல்வியைத் தழுவியது, இதன் மூலம் இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று புதிய சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
IND vs BAN Test Series
பாகிஸ்தானை 2-0 என்று வீழ்த்திய நம்பிக்கையோடு இந்தியாவிற்கு வந்த வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்ற மோசமான சாதனையோடு சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பந்து வீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து நடையை கட்டினர்.
ஆனால், முதல் டெஸ்ட் போட்டிக்கு 2ஆவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் நடைபெற்றது. இதில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் எடுத்தார். அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. கான்பூரில் பெய்த மழையின் காரணமாக முதல் நாள் போட்டியே தாமதமாக தொடங்கப்பட்டது. எனினும், போதிய வெளிச்சமின்மை காரணமாக முன் கூட்டியே முதல் நாள் போட்டியும் முடிக்கப்பட்டது.
IND vs BAN Test
அதன் பிறகு 2ஆவது நாளில் பெய்த மழை பெய்த நிலையில் போட்டி நடத்தப்படவில்லை. 3ஆவது நாளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தான் 4ஆவது நாளான போட்டி நேற்று தொடங்கியது. இதில், வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கடைசி வரை பொறுமையாக விளையாடிய மோமினுல் ஹக் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. இதில், ஜஸ்பிர்த் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார். முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியொர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
Kanpur 2nd Test
இதையடுத்து டீம் இந்தியா முதல் இன்னிங்ஸை விளையாடியது. டெஸ்ட் கிரிக்கெட் போன்று விளையாடாமல் டி20 கிரிக்கெட் போன்று அதிரடியாக விளையாடி ஒரே நாளில் உலக சாதனை படைத்தது. அதாவது, வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து மகத்தான சரித்திர சாதனையை இந்தியா படைத்தது.
அதுமட்டுமின்றி யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் இருவரும் அதிவேகமாக அரைசதம் அடித்தனர். விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இறுதியாக இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இந்தியா 52 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர், வங்கதேசம் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 4ஆவது நாள் முடிவில் வங்கதேசம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து 5ஆவது நாள் போட்டி இன்று தொடங்கியது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் வங்கதேச வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றவே வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
India vs Bangladesh Test
இதன் மூலமாக இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு வந்த இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் ரோகித் சர்மா 8 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 29 ரன்கள் எடுக்க, ரிஷப் பண்ட் கடைசியில் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன் மூலமாக இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது. அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 180ஆவது வெற்றியை பெற்றது. மேலும், சொந்த மண்ணில் 2013 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தொடர்ந்து 18 டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
IND vs BAN Test
இந்த தொடர் வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி ஒரு டிரா உடன் மொத்தமாக 98 புள்ளிகள் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திலும், இலங்கை 3ஆவது இடத்திலும் நீடிக்கின்றன. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.