- Home
- Sports
- Sports Cricket
- WI vs IND: 3வது ODIயிலும் அபார வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா
WI vs IND: 3வது ODIயிலும் அபார வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 113 ரன்களை குவித்தனர். ஷிகர் தவான் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும் நன்றாக பேட்டிங் ஆடினார். ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் 98 பந்தில் 98 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில்நின்றபோதும், அவரால் சதத்தை எட்டமுடியவில்லை. இதையடுத்து 36 ஓவரில் 225 ரன்கள் அடித்தது.
இந்திய அணியின் இன்னிங்ஸின் இடையே மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டதால், டி.எல்.எஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸுக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 257 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன் மற்றும் பிரண்டன் கிங் ஆகிய இருவரும் தலா 42 ரன்கள் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே அந்தளவிற்குக்கூட ஆடவில்லை.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 26 ஓவரில் வெறும் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் இந்த போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் ஒருநாள் தொடரின் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஷுப்மன் கில் வென்றார்.