பரபரப்பான கட்டத்தில் 3வது டெஸ்ட்! கடைசி நாளில் இந்தியா வெற்றி பெறுமா?
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

India Has A High Chance Of Winning The 3rd Test Against England
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
அசத்திய இந்திய பவுலர்கள்
நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2/0 என்ற நிலையில் இருந்து இன்று தொடர்ந்து ஆடியது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்ததால் இங்கிலாந்து அணி தடுமாறியது. பென் டக்கெட் 12 ரன்னில் சிராஜ் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆலி போப் 4 ரன்னில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்பு சாக் க்ரொலி (22 ரன்) ஹாரி ப்ரூக் (23 ரன்) அடுத்தடுத்து வெளியேறியதால் இங்கிலாந்து அணி 87/4 என பரிதவித்தது.
இங்கிலாந்து 192 ரன்னில் சுருண்டது
பின்பு ஜோ ரூட்டும், பென் ஸ்டோக்ஸும் அணியை சரிவில் இருந்து மீட்டாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 40 ரன்கள் அடித்த ஜோ ரூட் வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டானார். இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் (33) வாஷிங்டன் ஓவரில் போல்டானார். பிறகு ஜேமி ஸ்மித்தும் (8) அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து தடுமாறியது. கடைசியில் வோக்ஸ் (10), கார்ஸ் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா எடுக்க இங்கிலாந்து அணி வெறும் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்திய அணி 4 விக்கெட் இழந்துள்ளது
பின்னர் 193 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், கருண் நாயர் பொறுப்புடன் விளையாடினார்கள். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் சில பவுண்டரிகளை ஓட விட்டார்.
ஆனால் மறுமுனையில் கருண் நாயர் 14 ரன்னில் கார்ஸ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில்லும் 6 ரன்னில் கார்ஸ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார். இதனால் இந்தியா நெருக்கடிக்கு சென்றது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 58/4 என்ற நிலையில் உள்ளது. வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை இருப்பதால் கடைசி நாளில் இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.