Asia Cup: ஜெயித்த இந்தியா, தோற்றுப்போன பாகிஸ்தான் 2 அணிகளுக்கும் ஆப்பு அடித்த ஐசிசி
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த 28ம் தேதி துபாயில் நடந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - Asia Cup: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம்(10), முகமது ரிஸ்வான் (42 பந்தில் 43 ரன்கள்) மற்றும் ஃபகர் ஜமான் (10) ஆகிய மூவருமே சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு சுருண்டது.
148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோஹித் (12), ராகுல்(0) ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ஜடேஜா தலா 35 ரன்கள் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 33 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்
இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டன. அதனால் ஜெஃப் க்ரூவ் தலைமையிலான ஐசிசி எலைட் பேனல், இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது. இரு அணி வீரர்களுக்கும் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.