லக்னோவில் புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசிலாந்து! வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் ஒரு சிக்சர் கூட அடிக்காதது சாதனையாக அமைந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
லக்னோ 2ஆவது டி20 போட்டி
ஏற்கனவே ராஞ்சியில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடந்தது.
யுஸ்வேந்திர சகால்
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியில் பின் ஆலென் மற்றும் கான்வே இருவரும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன் கணக்கை தொடங்க நியூசிலாந்து அணி 21 ரன்கள் எடுத்திருந்த போது யுஸ்வேந்திர சகால் சுழலில் பின் ஆலென் (11 ரன்கள்) கிளீன் போல்டானார்.
நியூசிலாந்து பேட்டிங்
இவரைத் தொடர்ந்து கான்வேயும் (11 ரன்கள்) வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கிளென் பிலிப்ஸ் (5), டேரில் மிட்செல் (8), சாப்மேன் (14), மைக்கேல் பிரேஸ்வெல் (14), இஸ் சோதி (1), லக்கி பெர்குசன் (0) என்று வரிசையாக ஒவ்வொருவராக நடையை கட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து சொதப்பல்
இதில் என்ன ஆச்சரியம் என்றால், கடந்த போட்டியில் பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய நியூசிலாந்து அணியால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. நியூசிலாந்து மொத்தமாக 6 பவுண்டரி மட்டுமே இந்தப் போட்டியில் அடித்துள்ளது.
குல்தீப் யாதவ்
சுழலுக்கு சாதகமான இந்தப் போட்டியில் சகால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், தீபக் கூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கைப்பற்ற, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.
மைக்கேல் பிரேஸ்வெல்
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கும் அதே சவால் தான் இருந்தது. பிரேஸ்வெல்லின் சுழல் பந்தில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதியும் இஸ் சோதியின் பந்தில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா வெற்றி
இறுதியாக கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் ஒரு ரன்னும், 3 ஆவது பந்தில் ஒரு ரன்னும், 4 ஆவது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டது. அடுத்த 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 111 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு சிக்சர் கூட இல்லை
மேலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று இந்தியா சமன் செய்துள்ளது. நியூசிலாந்தைப் போன்று தான் இந்தியாவும், 8 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளது. ஆனால், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 239 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத அணிகள் என்ற புதிய சாதனை படைத்துள்ளன.
இந்தியா - நியூசிலாந்து சாதனை
இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு 238 பந்துகள் விளையாடிய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த சாதனையை படைத்திருந்தன. அதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 223 பந்துகள் வரையில் விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் 207 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்ற சாதனையை படைத்திருந்தன.
239 பந்துகள் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை
2023 - 239 பந்துகள் - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் - லக்னோ ஒரு சிக்சர் கூட இல்லை.
2021 - 238 பந்துகள் - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் - மிர்பூர் - ஒரு சிக்சர் கூட இல்லை.
2010 - 223 பந்துகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் - கார்டிஃப் - ஒரு சிக்சர் கூட இல்லை.
2021 - 207 பந்துகள் - இலங்கை மற்றும் இந்தியா அணிகள் - கொழும்பு - ஒரு சிக்சர் கூட இல்லை.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.