- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA முதல் டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்..! எளிய இலக்கை சேஸ் செய்ய தடுமாறும் இந்தியா!
IND vs SA முதல் டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்..! எளிய இலக்கை சேஸ் செய்ய தடுமாறும் இந்தியா!
Shubman Gill Out; India Struggle in 124-Run Chase: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகியுள்ளார். 124 ரன்களை சேஸ் செய்ய பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

சுப்மன் கில்லுக்கு காயம்
கழுத்து தசைப்பிடிப்பால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஈடன் கார்டனில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சுப்மன் கில் ஸ்பின் பந்தை ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தபோது வலியால் துடித்தபடி தனது கழுத்தைப் பிடித்துக்கொண்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் மற்றும் இருதயநோய் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சுப்மன் கில் முதல் டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சுப்மன் கில் விலகல்
''கேப்டன் சுப்மன் கில்லுக்கு கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டத்தில் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அன்றைய ஆட்ட நேர முடிவில் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இனி பங்கேற்க மாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணிக்கும்" என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 124 ரன்கள் இலக்கு
இதற்கிடையே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெர 124 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 93/7 என்ற நிலையில் இருந்தது.
2 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம்
இன்று 3ம் நாள் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா சிறப்பாக விளையாடி 55 ரன் அடித்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 30 ஓவரில் 50 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணி ஜெய்ஸ்வால் (0), கே.எல்.ராகுல் (1) என 10 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.