- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA: பிளாட் பிட்ச்சிலும் பேட்ஸ்மேன்களை கதற விட்ட பும்ரா..! 159 ரன்னில் முடங்கிய தென்னாப்பிரிக்கா!
IND vs SA: பிளாட் பிட்ச்சிலும் பேட்ஸ்மேன்களை கதற விட்ட பும்ரா..! 159 ரன்னில் முடங்கிய தென்னாப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு சுருண்டது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிளாட் பிட்ச்சிலும் அசத்தலாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
நல்ல தொடக்கம் கண்ட தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 57 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் பும்ராவின் சூப்பர் பவுலிங்கில் 23 ரன் எடுத்து போல்டானார். பின்பு ஓரளவு சிறப்பாக விளையாடிய மார்க்ரமும் (31 ரன்கள்) பும்ராவின் பவுன்ஸ் பந்துக்கு இரையானார்.
பின்பு தடம்புரண்ட பேட்ஸ்மேன்கள்
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா (3) குல்தீப் பந்தில் கேட்ச் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 71/3 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த வியான் முல்டர், டோனி டி சோர்ஸி அணியை சிறிது சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்கோர் 114 ஆக உயர்ந்தபோது சூப்பராக விளையாடிய முல்டர் (24) தேவையில்லாமல் ரிவர்ஸ் ஷாட் அடித்து குல்தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதன்பின்பு டோனி டி சோர்ஸியும் (24) பும்ரா பந்தில் வெளியேற தென்னாபிரிக்கா அணி தடம்புரள ஆரம்பித்தது.
159 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா
பின்னர் கைல் வெர்ரெய்ன் (16), மார்கோ ஜான்சன் (0) ஆகியோரை சிராஜ் ஒரே ஓவரில் காலி செய்ய, டெயிலெண்டர்களான சைமன் ஹார்மர் (5), கேசவ் மகாராஜ் (0) ஆகியோரை பும்ரா வெளியேற்ற தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு சுருண்டது.
பும்ரா மேஜிக் பவுலிங்
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த பிளாட் பிட்ச்சிலும் அசத்தலாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை கதற விட்ட ஜஸ்பிரித் பும்ரா 14 ஓவரில் 5 மெய்டன்களுடன் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.