- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS 2nd T20: ஹேசில்வுட் புயலில் சிக்கிய இந்தியா! தனியாக போராடிய அபிஷேக்! ஆஸி.க்கு எளிய இலக்கு!
IND vs AUS 2nd T20: ஹேசில்வுட் புயலில் சிக்கிய இந்தியா! தனியாக போராடிய அபிஷேக்! ஆஸி.க்கு எளிய இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புயல்போல் பந்துவீசிய ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அபிஷேக் சர்மா தனி ஆளாக போராடி அரைசதம் அடித்தார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டி20
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவை முதல் பந்திலேயே ஜோஷ் ஹேசில்வுட் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஹேசில்வுட்டின் முதல் பந்தில் துணை கேப்டன் சுப்மன் கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தாலும், ரிவ்யூ எடுத்து தப்பினார். ஆனாலும் கில் 5 ரன்னில் வெளியேறினார். ஹேசில்வுட்டின் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி மோசமான தொடக்கம்
இதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்னில் எல்லீஸ் ப்ந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்பு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் (1 ரன்) ஹேசில்வுட்டின் சூப்பர் பவுலிங்கில் வெளியேறினார். தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் (0) ஹேசில்வுட் பந்தில் தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார். அக்சர் படேலும் (7) தேவைவில்லாத ரன் அவுட் ஆனார்.
ஹேசில்வுட்டின் புயல் பவுலிங்
புயல் போல் பந்துவீசிய ஹேசில்வுட் பவுர்பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து போட்டார். இந்திய அணி 49/5 என பரிதவித்தது. ஒரு பக்கம் கொத்து கொத்தாக விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தனது வழக்கமான அதிரடியில் பட்டைய கிளப்பினார். ஹேசில்வுட் தவிர மற்ற பவுலர்களின் பந்துவீச்சில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசித் தள்ளி 22 பந்தில் அரை சதம் அடித்தார்.
தனி ஆளாக போராடிய அபிஷேக் சர்மா
ஷிவம் துபேக்கு முன்பாக களமிறங்கிய ஹர்சித் ராணா நன்றாக விளையாடினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. ஸ்கோர் 15 ஓவரில் 105 ரன்களை தொட்டபோது ஹர்சித் ராணா (33 பந்தில் 35 ரன்) அவுட் ஆனார். அதன்பிறகு இந்தியா மீண்டும் தடம்புரண்டது. ஷிவம் துபே (4) வந்த வேகத்தில் வெளியேறினார். மறுமுனையில் தனி ஆளாக போராடிய அபிஷேக் சர்மா 37 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன் எடுத்து எல்லிஸ் பந்தில் அவுட் ஆனார்.
இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட்
இறுதியில் குல்தீப் யாதவ் (0), பும்ரா (0) அவுட் ஆக இந்திய அணி 18.4 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மேஜிக் பவுலிங் செய்த ஹேசில்வுட் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பார்லெட், எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்கிறது.