#INDvsENG கோலி - ஸ்டோக்ஸ் மோதல்.. ”சின்னப்புள்ளத்தனமா அடிச்சுக்குறாய்ங்க” என விமர்சித்த முன்னாள் வீரர்
விராட் கோலி - பென் ஸ்டோக்ஸ் மோதல் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் கருத்து கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்தின் 3வது செசனில் வெறும் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 153 ரன்கள் அடித்துள்ளது.
முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி - ஸ்டோக்ஸ் இடையே மோதல் மூண்டது. 13வது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரின் கடைசி பந்தை பவுன்ஸராக வீசினார். இதையடுத்து சிராஜை திட்டி சீண்டினார். ஸ்டோக்ஸின் சீண்டலுக்கு ரியாக்ட் செய்யாமல் நகன்ற சிராஜ், கோலியிடம் கோர்த்துவிட்டார். சண்டைக்காக காத்திருக்கும் கோலி சும்மாவிடுவாரா? பேர்ஸ்டோவிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸிடம் சென்று கோலி பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அம்பயர்கள் நிதின் மேனனும் வீரேந்தர் ஷர்மாவும் இருவரையும் விலக்கிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான், அவரவர், அவரவர் கேமை ஆட வேண்டியதுதானே.. என்னை பொறுத்தமட்டில் இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஸ்வான் தெரிவித்தார்.