#IPL2021Auction நான் அந்த அணியில் ஆட விரும்புகிறேன்..! வாண்டடா போய் வண்டியில் ஏறும் க்ளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், தான் எந்த அணியில் ஆட விரும்புகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. ஐபிஎல்லில் பெரும்பாலான சீசன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியுள்ள க்ளென் மேக்ஸ்வெல்லை கடந்த சீசனில் சரியாக ஆடாததால் அந்த அணி கழட்டிவிட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.
14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தான் ஆடவிரும்பும் அணி குறித்து க்ளென் மேக்ஸ்வெல்லே வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மேக்ஸ்வெல், எனக்கு கோலியுடன் நல்ல உறவு இருக்கிறது. அவரது கேப்டன்சியிலும் அவருடன் சேர்ந்து பேட்டிங்கும் ஆடுவது மிகச்சிறப்பாக இருக்கும். எனது கெரியரில் எனக்கு எப்போதுமே கோலி உதவிகரமாக இருந்திருக்கிறார். மிகச்சிறந்தவர் கோலி; எனவே அவருடன் இணைந்து ஆடுவது மிகச்சிறப்பாக இருக்கும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணியாவது மேக்ஸ்வெல் பல சீசன்களாக சரியாக ஆடாதபோதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து, அவர் ஜெயித்து கொடுத்த சில பாசிட்டிவான போட்டிகளை கருத்தில்கொண்டு அவரை நிறைய சீசன்கள் தக்கவைத்தது. ஆனால் ஆர்சிபி அணி, கோலி, டிவில்லியர்ஸ், இப்போது சாஹல், இவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் எடுப்பதும் கழட்டிவிடுவதுமாகவே இருக்கும். ஒருசில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் கூட, அடுத்த சீசனில் கழட்டிவிட்டுவிடும். அந்த அணியில் ஆட விரும்புவதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.