#AUSvsIND கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்..!
இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் ஆடிய மேக்ஸ்வெல், கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 374 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 308 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஃபின்ச் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் சதமடித்தனர். ஆனாலும் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் அடித்த 45 ரன்கள் தான் ஆஸ்திரேலிய அணி 374 ரன்களை எட்ட உதவியது. 19 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார் மேக்ஸ்வெல்.
ஐபிஎல்லில் படுமோசமாக சொதப்பிவிட்டு, ஆஸ்திரேலிய அணிக்காக ஆடும்போது மேக்ஸ்வெல் அபாரமாக ஆடியதன் விளைவாக, மேக்ஸ்வெல்லை கேஎல் ராகுல் கோபமாக பார்ப்பதுபோன்று ஒரு மீம்ஸ் டுவிட்டரில் வைரலானது. அதில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமையும் இணைத்து அந்த மீம்ஸை உருவாக்கியிருந்தனர். பஞ்சாப் அணியில் ஆடிய மேக்ஸ்வெல், நீஷம் இருவருமே படுமோசமாக சொதப்பிய நிலையில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக அபாரமாக ஆடியதை போலவே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் நீஷம் அதிரடியாக ஆடி மிரட்டினார்.
தன்னை கலாய்த்து பதிவிடப்பட்ட மீம்ஸை கண்ட மேக்ஸ்வெல், தான் சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது, ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக பதில் டுவீட் செய்திருந்தார். ஜிம்மி நீஷமும் அந்த மீம்ஸை வெகுவாக ரசித்து, இது கரெக்ட் தான் என்று பதிவிட்டிருந்தார்.
மேக்ஸ்வெல், அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல்லில் 11 போட்டிகளில் வெறும் 15.42 என்ற சராசரியுடன் 108 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.