- Home
- Sports
- Sports Cricket
- 6 நிமிடங்களில் 1,200 மீ ஓடணும்! இந்திய வீரர்களுக்கு 'பிரான்கோ' டெஸ்ட் வைக்கும் கவுதம் கம்பீர்!
6 நிமிடங்களில் 1,200 மீ ஓடணும்! இந்திய வீரர்களுக்கு 'பிரான்கோ' டெஸ்ட் வைக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரக்பி விளையாட்டில் பயன்படுத்தப்படும் பிரான்கோ டெஸ்ட் கொண்டு வரப்பட்டுள்ளது.

Gambhir Brought The Franco Test To Indian Players
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், அணிக்குள் புதிய மற்றும் கடுமையான உடற்தகுதி சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உடற்தகுதியை நிரூபிக்க இனி யோ யோ டெஸ்ட் மட்டும் போதாது. வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதியை சோதிக்க ரக்பி வீரர்களுக்கு நடத்தப்படும் பிராங்கோ டெஸ்டையும் நடத்த இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்திய வீரர்களுக்கு பிரான்கோ டெஸ்ட்
ஜூன் மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட உடற்தகுதி பயிற்சியாளர் அட்ரியன் லெ ரூக்ஸின் ஆலோசனையின் பேரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த புதிய டெஸ்டை அறிமுகப்படுத்துகிறார். இது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ-யோ டெஸ்ட் மற்றும் 2 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்துடன் கூடுதலாக, "பிரான்கோ டெஸ்ட்" என்று அழைக்கப்படும் ஒரு புதிய சோதனையாகும். இது வீரர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திறன் மற்றும் சகிப்புத்தன்மையை சோதிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரக்பி வீரர்களுக்கான டெஸ்ட்
2000 ஆம் ஆண்டில் இந்திய அணியுடன் பணியாற்றிய ரூக்ஸ், பின்னர் தென்னாப்பிரிக்க அணி, ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உடற்தகுதி பயிற்சியாளராக இருந்தார். ரக்பி வீரர்களின் உடற்தகுதியை அளவிட பிரான்கோ டெஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி குறைபாடு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்மில் எடையைத் தூக்குவதற்குப் பதிலாக அதிகமாக ஓட வேண்டும் என்று ரூக்ஸ் அறிவுறுத்தியிருந்தார்.
பிரான்கோ டெஸ்ட் என்றால் என்ன?
பிரான்கோ டெஸ்ட் என்பது, ரக்பி போன்ற விளையாட்டுகளில் வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு தீவிரமான, தொடர்ச்சியான ஓட்டப்பயிற்சி ஆகும். இது ஒரு வீரரின் ஏரோபிக் சகிப்புத்தன்மை, வேகம் மற்றும் ஒட்டுமொத்த ஓட்டத் திறனை அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது. யோ-யோ டெஸ்டில் சிறிய ஓய்வு இடைவெளிகள் இருக்கும், ஆனால் பிரான்கோ டெஸ்டில் எந்த ஓய்வும் இல்லாமல், தொடர்ச்சியான ஓட்டம் இருக்கும்.
பிரான்கோ டெஸ்ட் எப்படி இருக்கும்?
பிரான்கோ டெஸ்ட்டின்படி ஒரு வீரர் 20 மீட்டர், 40 மீட்டர், மற்றும் 60 மீட்டர் என மூன்று ஓட்டங்களை முடிப்பார். இந்த மூன்று ஓட்டங்களும் (20+20, 40+40, 60+60) மீண்டும் தொடக்க இடத்திற்கே திரும்பி வருவதை உள்ளடக்கியது. அதாவது, 40 மீ, 80 மீ, மற்றும் 120 மீ என ஓட வேண்டும்.இந்த மூன்று ஓட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு சுற்று, எந்த ஓய்வும் இல்லாமல் தொடர்ந்து ஐந்து முறை செய்யப்பட வேண்டும்.
மொத்தத்தில், வீரர் 1200 மீட்டர் (1.2 கிலோமீட்டர்) தூரத்தை ஓட வேண்டும். கேப்டன் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்றோர் இந்த 1200 மீட்டரை ஆறு நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

