#AUSvsIND இந்த விஷயத்துல நான் கோலி பக்கம் தான்..! நாம எல்லாருமே அவருக்கு ஆதரவா இருக்கணும்.. கம்பீர் அதிரடி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற முறையில், ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் அப்டேட் விராட் கோலிக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோது, ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல்லில் தொடைப்பகுதியில் காயம் அடைந்ததால் அவரது பெயர் இல்லை.
பின்னர் டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். அதனால் அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றுவிட்டார் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆனால் இந்திய வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் உடற்தகுதி பெறுவது சந்தேகம் என்பதால், அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேப்டன் விராட் கோலி, ரோஹித் எங்களுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஏன் வரவில்லை என்ற தகவல் கிடைக்கவில்லை. ரோஹித் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் என்பது மட்டுமே அதிகாரப்பூர்வமாக நாங்கள் பெற்ற தகவல். டிசம்பர் 11ம் தேதி அவரது உடற்தகுதி மறுபடியும் பரிசோதிக்கப்படுகிறது. முதல் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கி, ஐபிஎல் முடிந்ததுவரை, கடைசி ஈமெயில் என எதிலுமே தெளிவான தகவல் இல்லை. ரோஹித்தின் காயம் மற்றும் உடற்தகுதி குறித்த தெளிவே இல்லை; குழப்பமாகவே இருக்கிறது என்று கோலி தெரிவித்தார்.
ரோஹித்தின் ஃபிட்னெஸ் குறித்து கேப்டன் கோலிக்கே தெரியப்படுத்தப்படாதது மோசமான விஷயம் என்று கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.
இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், இது சரியல்ல. இந்த விஷயத்தில் கோலிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் தான் கேப்டன். இந்திய கிரிக்கெட் அணியை களத்தில் வழிநடத்துபவர் கோலி. விமர்சனங்களை எதிர்கொள்ளும் இடத்தில் இருப்பவரும் அவரே. எனவே அனைத்து வீரர்களின் ஃபிட்னெஸ் உட்பட அனைத்துவிதமான அப்டேட்டுகளும் அவருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
விராட் கோலியிடம் தெரியப்படுத்த வேண்டியது தேர்வாளர்களின் பொறுப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி. ஏதேனும் தவறு நடந்தால், நாம் அனைவரும் விராட் கோலியைத்தான் விமர்சிக்கிறோம். எனவே ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் அப்டேட் விராட் கோலிக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றால், இந்த விஷயத்தில் விராட் கோலியின் பக்கம் நாம் இருக்க வேண்டும். இது சரியல்ல என்று கம்பீர் தெரிவித்தார்.