TNPL Eliminator: அஸ்வின் அதிரடியால் திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் திண்டுக்கல் அணி திருச்சியை வீழ்த்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி அரைசதம் அடித்தார்.

TNPL 2025: Dindigul Dragons Beat Trichy
டிஎன்பிஎல் கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்கள் வாஷிம் அகமது (36 ரன்), கேப்டன் சுரேஷ் குமார் (23) நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
திருச்சி அணி முதலில் பேட்டிங்
பின்பு களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் (9), சஞ்சய் யாதவ் (1), ராஜ் குமார் (0) ஆகியோர் ஏமாற்றினார்கள். கடைசிக் கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த ஜாபர் ஜமால் 20 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் திருச்சி அணி 140 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். வருண் சக்கரவர்த்தி, கணேசன் பெரியசாமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி
பின்பு எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் கண்ட கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். சரமாரியாக பவுண்டரிகளை விளாசினார். மறுபக்கம் ஷிவம் சிங் (16), விமல் குமார் (7), தினேஷ் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசிய அஸ்வின் கேட்ச் ஆனார். கடைசியில் பாபா இந்திரஜித் (27 பந்தில் 29) சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெறும் 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த திருச்சி அணி தொடரில் இருந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு செல்ல திண்டுக்கல் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் விளையாடும். பேட்டிங்கில் 83 ரன்கள் அடித்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் ஆட்டநாயன் விருது வென்றார்.