- Home
- Sports
- Sports Cricket
- வேட்டி, சட்டையில் செம கலர்ஃபுல்லா கலக்கிய சிஎஸ்கே வீரர்கள்! நியூசி., வீரருக்கு தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம்
வேட்டி, சட்டையில் செம கலர்ஃபுல்லா கலக்கிய சிஎஸ்கே வீரர்கள்! நியூசி., வீரருக்கு தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம்
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவுக்கு தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிச்சயதார்த்த விழாவில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து கலக்கலாக இருந்தனர்.

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி ஜடேஜா தலைமையில் திணறிவருகிறது. முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மீதம் 5 போட்டிகளில் தோற்றுள்ளது. சிஎஸ்கே அணி வீரர்கள் பபுள் மன அழுத்தத்துடன், தொடர் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த நிலையில், அவர்களை ரெஃப்ரெஷ் செய்யும் விதமாக அமைந்தது நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவின் நிச்சயதார்த்த விழா.
ஃபாஃப் டுப்ளெசிஸை கழட்டிவிட்ட சிஎஸ்கே அணி, அவருக்கு மாற்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவை ஒப்பந்தம் செய்தது. ஆனால் கான்வேவுக்கு ஒரு போட்டியில் மட்டுமே ஆட வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், கான்வேவுக்கும் அவரது காதலி கிம் வாட்சனுக்கும் தமிழ் முறைப்படி மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்தது. கான்வே - கிம் ஜோடிக்கு ஏற்கனவே நியூசிலாந்தில் அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. கான்வே ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அவரை பார்க்க மும்பைக்கு வந்தார் அவரது காதலி கிம். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டு, தமிழ் முறை இருவருக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தியது சிஎஸ்கே அணி.
இந்த விழாவில், சிஎஸ்கே வீரர்கள் தோனி, ஜடேஜா, பிராவோ, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட அனைவருமே வேட்டி, சட்டையில் கலர்ஃபுல்லாக வலம் வந்தனர். அந்த புகைப்படங்களை சிஎஸ்கே அணி டுவிட்டரில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.